×

மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிக்கு கட்டணமில்லா உயர்கல்வி சேர்க்கை: எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் வழங்கியது

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முதல் இடம் பெற்ற மாணவி காயத்திரிக்கு கட்டணமில்லா உயர்கல்வி சேர்க்கையை எத்திராஜ் கல்லூரி நேற்று வழங்கியது. மாணவி படிப்பிற்கு ஏற்படும் முழு செலவையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றது. சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளியின், பெரம்பூரில் பகுதியில் பயின்ற மாணவி காயத்திரி பிளஸ்2 தேர்வில், 592 மதிப்பெண்கள் எடுத்து மாநகராட்சி பள்ளிகளில் முதல் இடத்தை பெற்றார். தந்தை, தாய் கூலி வேலைக்கு செல்லும் சூழலில், உயர்கல்வி படிப்பதற்கு குடும்ப பொருளாதாரம் இல்லை. எனவே, உயர்கல்வி பயில்வதற்கு உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என ஊடகங்களில் காயத்திரி அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இதனை அறிந்த சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் முரளிதரன், மாணவியின் பட்டபடிப்பிற்கு ஏற்படும் செலவுகள் அனைத்தையும் எத்திராஜ் கல்லூரி நிர்வாகமே ஏற்கும். அவருக்கு கட்டணமில்லா இலவச சேர்க்கை வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில், பி.காம்(பொது) படிப்பிற்கான சேர்க்கை அனுமதி வழங்கி முழுச் செலவையும் நிர்வாகமே ஏற்றதற்கான சேர்க்கை ஆணையை, நிர்வாகத் தலைவர் முரளிதரன் மாணவியிடம் வழங்கினார்.

இது குறித்து மாணவி காயத்ரி கூறுகையில், உயர் படிப்பை நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். முதலில் கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும் இடம் கிடைக்குமா என்ற சிறிய தயக்கம் இருந்தது. ஆனால், தற்போது அவர்களே அழைத்து சேர்க்கை ஆணையை வழங்கியபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்திராஜ் மகளிர் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் கல்லூரி முதல்வருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எத்திராஜ் மகளிர் கல்லூரி அறக்கட்டளையின் தலைவர் முரளிதரன் கூறுகையில், இன்றுதான் எங்கள் கல்லூரியில் 2023-24ம் ஆண்டுக்கான மாணவிகள் சேர்க்கையை தொடங்கி இருக்கிறோம். அதை முதலில் இந்த மாணவியிடமிருந்து தான் தொடங்கி இருக்கிறோம். மாநகராட்சி பள்ளிகளில் இது போன்ற சாதனைகள் புரிவது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கி மாநகராட்சி மற்றும் அரசுப்பள்ளிகளில் படித்து அதிக மதிப்பெண் எடுத்து சாதனை புரியும் மாணவிகளுக்கு நிச்சயம் எங்கள் கல்லூரியில் இடம் உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவிக்கு கட்டணமில்லா உயர்கல்வி சேர்க்கை: எத்திராஜ் கல்லூரி நிர்வாகம் வழங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal School ,Etraj College Administration ,Chennai ,Chennai Municipal Schools ,Kayatri ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...